ஐரோப்பாவிற்கு சட்ட விரோத கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த போது மீட்கப்பட்ட 440 பேரில் இலங்கையர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு அவர்கள் கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பினர் நேற்று (05) இவர்களை மீட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 1ம் திகதி லிபியாவின் பெங்காசி அருகே அதிக பாரம் ஏற்றிய மீன்பிடி படகின் மூலம் இத்தாலி செல்ல முயன்றனர்.
இந்நிலையில் கடலில் பயணம் செய்த அவர்கள் 11 மணி நேர கடினமான நடவடிக்கைக்கு பின் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மீட்கப்பட்டவர்கள் சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, சோமாலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த குழுவில் 08 பெண்களும் 30 குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 04 நாட்கள் கடல் பயணத்தில், கடந்த இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி அவர்கள் தவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.