அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான முதன்மை நிலை பள்ளி ஒன்று அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வந்துள்ளனர்.
இதில், 30 வயதுடைய ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும், 6 வயது சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதில், சிறுவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியையை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டுள்ளான்.
இந்த தாக்குதலில் ஆசிரியை பலத்த காயமடைந்து உள்ளார். உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில், அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி காவல் தலைமை அதிகாரி ஸ்டுவ் ட்ரூ கூறும்போது, 6 வயது சிறுவனை போலீஸ் காவலில் எடுத்து உள்ளோம்.
ஆசிரியையைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் வேறு மாணவர்கள் யாருக்கும் தொடர்பு எதுவும் இல்லை. துப்பாக்கி சிறுவனுக்கு எப்படி கிடைத்தது? இதன் பின்னணி என்ன? என்பது பற்றி விசாரிக்க வேண்டி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் எதிரொலியாக, வருகிற திங்கட்கிழமை ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. இதுபற்றி நியூபோர்ட் நியூஸ் பொது பள்ளிகளுக்கான சூப்பிரெண்டு ஜார்ஜ் பார்க்கர் கூறும்போது, சம்பவம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மனமுடைந்து போனேன். ஆசிரியர்கள் முதலில், இந்த விசயத்தில் குழந்தைகளுக்கு கற்று தர வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் உதா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டியில் வீடு ஒன்றில் தற்செயலாக போலீசார் சோதனையிட சென்றபோது, அந்த வீட்டில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து கிடந்தனர். இதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.