பிரித்தானியாவில் 11 வயது சிறுவனாக தான் இருந்தபோது, பாடசாலை மாணவர் விடுதியில் தன்னை தங்க வைத்தமைக்காக, 40 வருடங்களின் பின்னர் வயோதிபப் பெற்றோரை பழிவாங்கும் வகையில் நபரொருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேஷயர் பிராந்தியத்தைச் சேர்ந்த, எட் லின்ஸ் எனும் 51 வயதான நபரே இவ்வாறு பெற்றோரை தாக்கினார் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
11 வயது சிறுவனாக இருந்த எட் லின்ஸை விடுதியுடன் கூடிய பாடசாலையொன்றில் கல்வி கற்க அவரின் பெற்றோர் அனுப்பியிருந்தனர். இதனால் கடந்த 40 வருடங்களாக தனது பெற்றோர் மீது அந்நபர் ஆத்திரமடைந்திருந்தார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி நள்ளிரவில் பெற்றோரின் வீட்டுக்குள் புகுந்த எட் லின்ஸ், 85 வயதான தனது தந்தை நிக்கலஸையும் 82 வயதான தாய் ஜூலியாவையும் கடுமையாக தாக்கியுள்ளார் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், நிக்கலலின் தலை, காது, கையில் கடும் காயங்கள் ஏற்பட்டன. மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் 5 வாரங்கள் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
எட் லின்ஸின் தாய் ஜூலியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டிருந்தது. பின்னர் எட் லின்ஸை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
சிறு வயதில் மாணவர் விடுதிக்கு அனுப்பப்பட்டதால் தான் அதிருப்தியுற்றிருந்தமை குறித்து, 51 வயதாகியும் அவர் விடபோதிலும் எட் லின்ஸ் கூறிவந்தார் என அவரின் தாய் விபரித்தார் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தந்தையை வேண்டுமென்றே தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டை எட் லின்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.