யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலையால் , வாழை செய்கையாளர்கள் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.
வாழை தோட்டங்கள் நிறைந்த சிறுப்பிட்டி ,நீர்வேலி, கந்தன், நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீசிய கடும் காற்றினால் வாழை மரங்கள் வாழை குலையுடன் முறிந்து விழுந்துள்ளது.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதிகளிலுள்ள பயன்தரு வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தாம் பெருமளவில் நிதியினை செலவழித்து வாழைகளை பராமரித்திருந்தோம். திடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பயன் தரு வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்துள்ளன.
இதனால் நாம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதால் , அது எமது வாழ்வாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் தமக்கு அரச அதிகாரிகள் நஷ்ட ஈட்டினை பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.