• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாம் விரும்பிச் சாப்பிடும் இட்லியின் பூர்வீகம் என்ன!

Dez 8, 2022

நம்முடைய உணவுப் பழக்கத்தில் இட்லி ஒரு முடிசூடா மன்னன். எத்தனை காலை உணவுகள் இருந்தாலும், வெள்ளை மற்றும் மென்மையான இட்லியுடன் அவற்றை ஒப்பிட முடியாது. சூடான இட்லியுடன் தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடி சேர்த்து நம்முடைய நாளை தொடங்கலாம். ஒரே நேரத்தில் 10 முதல் 12 இட்லிகள் அவிக்க முடியும் என்பதால் வேலையும் மிகக் குறைவு. எளிதில் ஜீரணமும் ஆகிவிடக்கூடியது.

இன்று தென்னிந்தியாவில் இட்லி கிடைக்காத இடமே இல்லை. ஆனால், இந்த இட்லி இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

தோசை, அப்பம், வடை, பஜ்ஜி போன்றவை குறித்து தமிழ்ச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது கி.மு.300ல் இருந்தே இவை நம்மிடம் பழக்கத்தில் உள்ளன. ஆனால், இட்லி?

இட்லியின் கதை

இந்தியாவில் கர்நாடகா பகுதியில் எழுதப்பட்ட கவிதைகளில் இட்லி முதன்முதலில் குறிப்பிடப்பட்டதாகவும், அவை சமஸ்கிருதத்தில் ‚இடலிகே‘ மற்றும் ‚இத்தாரிகா‘ என்று அழைக்கப்பட்டதாகவும் உணவு வரலாற்றாசிரியர் கே.டி. அச்சையா கூறுகிறார்.

அலிகே என்றால் கன்னடத்தில் நீராவி பாத்திரம் என்று பொருள். இதிலிருந்தே ‚இடலிகே‘ என்ற சொல் வந்திருக்கலாம் என்பது அச்சையாவின் ஊகம்.

920ல் கன்னடக் கவிஞர் சிவகோடி ஆச்சார்யா எழுதிய வத்தராதனே என்ற கவிதையில் இட்லி பற்றிய முதல் குறிப்பு உள்ளதாக கே.டி. அச்சையா தனது ‚இந்திய உணவு: வரலாற்றுத் துணை‘ புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அதன் பின்னர் பல படைப்புகளில் இட்லி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி.1025ல் சவுந்தராயா என்ற கவிஞர் இட்லி செய்யும் முறையை விவரித்துள்ளார்.

அதன்பிறகு, கி.பி.1130ல் ‚மனசொல்லாச‘ என்ற சமஸ்கிருத நூலில் இட்லி பற்றிய குறிப்பு இருப்பதாக அச்சையா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்

தமிழ்நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மச்சபுராணத்தில் ‚இட்டலி‘ என்ற பெயரில் இட்லி பற்றிய குறிப்பு இருப்பதாக அச்சையா குறிப்பிட்டுள்ளார்.

கி.பி 1235 தேதியிட்ட கர்நாடகக் குறிப்பு இட்லிகளை ஒளி மற்றும் விலைமதிப்பற்ற நாணயம் போன்ற பொருள் என்று குறிப்பிடுகிறது.

இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்ட மூன்றிலும், இட்லி தயாரிக்க அரிசி பயன்படுத்தப்பட்டதாக குறிப்பு இல்லை. எனவே முற்காலத்தில் இட்லி உளுந்துடன் சமைக்கப்பட்டிருக்கும் என்று அச்சையா நம்புகிறார்.

அதேபோல நவீன காலத்தில் இட்லி தயாரிக்கப்படும் முறையும் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. எனவே நவீன கால இட்லி தயாரிப்பு செயல்முறைகள் எப்போது நம்மிடம் பழக்கத்திற்கு வந்தன என்பதைச் சொல்ல தெளிவான சான்றுகள் இல்லை என்று அச்சையா தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

இட்லி எங்கிருந்து வந்தது?

இட்லி எங்கிருந்து வந்தது?

இட்லி இந்தோனீசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கே.டி. அச்சையா தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

அவருடைய ஆராய்ச்சியின் படி, இந்தோனீசியாவில் பழங்காலத்திலிருந்தே பொருட்களை வேகவைக்கும் முறை நடைமுறையில் உள்ளது. சோயாபீன்ஸ், வேர்க்கடலை, மீன் போன்றவற்றை அந்த மக்கள் வேகவைத்து உண்டார்கள்.

‚கெட்லி‘ என்பது இந்தோனீசியாவில் புளிக்கவைக்கப்பட்டு வேகவைக்கப்படும் ஒரு பொருள் என்று அச்சையா கூறுகிறார்.

சீனாவிலும் பழங்காலத்திலிருந்தே வேகவைத்தல் முறை நடைமுறையில் உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீன புத்த துறவி ஹுயன் சாங் இந்தியாவில் நீராவி பாத்திரங்களே இல்லை என்று கூறினார்.

8 ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தோனீசியாவை ஆண்ட இந்து மன்னர்களிடம் பணிபுரிந்த இந்திய சமையல்காரர்கள் இந்தியா திரும்பிய போது நொதித்தல் செயல்முறையை இங்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று கே.டி. அச்சையா கூறுகிறார்.

பிற்காலத்தில், தினையுடன் அரிசியைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனை தோன்றி, இட்லி தயாரிப்பில் அரிசி சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

இந்தோனீசியாவில் கெட்லி இருந்தது போலவே செக்கோஸ்லோவாக்கியாவில் நீட்லீக் என்ற பொருள் சமைக்கப்பட்டது.

புளிக்கவைப்பது மற்றும் இட்லி செய்வது எப்படி என்பது தெரியாவிட்டாலும், இந்தியர்களுக்கு ஆவியில் சமைக்கத் தெரியும் என்று அச்சையா கூறுகிறார்.

„இந்தியாவில் நீராவி பாத்திரங்கள் இல்லை என்று சீனப் பயணி ஹுயென் சாங் கூறினார். அதற்கு நீராவியில் சமைக்கத் தெரியாது என்று அர்த்தமல்ல. இந்தியர்களுக்கு எளிமையான முறையில் ஆவியில் வேக வைக்கத் தெரியும். அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்த பிறகு மெல்லிய துணிஅல்லது மூங்கில் கூடைகளில் பண்டம் மூடப்பட்டு மேலே இருந்து தொங்கவிடப்பட்டது. கேரளாவில் புட்டு இந்த முறையில் சமைக்கப்படும். மேலும், சிந்து பள்ளத்தாக்கு பகுதிகளில், ஒரு நீண்ட துளையிடப்பட்ட மண் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது நாம் நீராவியில் சமைத்ததைக் குறிக்கிறது“ என்று கே.டி. அச்சையா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

எத்தனை வகை இட்லி உள்ளது?

எத்தனை வகை இட்லி உள்ளது?

இந்தோனீசியாவிலிருந்து நம் நாட்டில் குடியேறியதாக நம்பப்படும் இட்லி, நவீன காலத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. இட்லி சமைப்பதில் நிறைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எம்டிஆர் இட்லியும், காஞ்சிபுரம் இட்லியும் மிகவும் பிரபலமாகிவிட்டன.

இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே இட்லி மிக முக்கியமான உணவுப் பொருள் என்கிறார் பிரபல உணவு எழுத்தாளர் வீர் சிங்வி.

ரவா இட்லி, ராகி இட்லி, பொடி இட்லி எனப் பல வகையான இட்லிகள் உள்ளன.

சமீபத்தில், மற்றொரு புதிய வகை இட்லியாக கரி இட்லிகள் எனப்படும் கருப்பு இட்லிகள் பிரபலமாகின. இது சமூக வலைதளங்களில் விமர்சனங்களைச் சந்தித்தது.

“இந்திய பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் இந்தியாவின் முதல் மனிதர்கள் கொண்ட விண்கலமான ககன்யானில் பயணிக்க இருக்கும் விண்வெளி வீரர்களுக்காக சில உள்நாட்டு உணவுகளை தயாரித்துள்ளது. அதில் ஒன்று சாம்பார் இட்லி” என கடந்த 2020ஆம் ஆண்டு ஏஎன்ஐ செய்தி முகமை ட்வீட் செய்தது.

எனினும், கொரோனா காரணமாக ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கடந்த ஜூன் மாதம் தெரிவித்தார். அதாவது, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இட்லியும் விண்வெளியை அடையும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed