சுவிட்சர்லாந்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் தவறவிட்ட பணத்தை, வீதியால் பயணித்த தம்பதியினரால் அவரது வீடுதேடிச் சென்று கொடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மாற்றுத்திறனாளி ஒருவர் நாட்டின் தெற்கு பகுதியில் சிறிய நகரமான மார்ட்டிக்னியில் உள்ள வங்கிக்குச் சென்று 20,000 சுவிஸ் பிராங்குகளை மீளெடுத்துள்ளார்.
பின் வங்கிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் அவர் ஏறியபோது பணத்தை வைத்து இருந்த பையை தவற விட்டுள்ளார்.
வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது பையை காணவில்லை என்பதை உணர்ந்த அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
மாற்றுத்திறனாளி நபர் பணத்தை தவறவிட்டதை அடுத்து அந்த வீதி வழியாக பயணித்த தம்பதியினர், பணக் கட்டு ஒன்று தெருவில் கிடப்பதை பார்த்து அதை கையில் எடுத்துள்ளனர்.
அந்த பணக்கட்டுடன் நபர் ஒருவரின் முகவரி அடங்கிய திரும்பப் பெறுதல் சீட்டு ரசீது இருந்ததை கண்ட தம்பதி, பணத்தை முழுவதுமாக திருப்பித் தர அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
தான் தவறவிட்ட பணத்தை வழங்குவதற்காக வீட்டிற்கே வந்த தம்பதிகளுக்கு மாற்றுத்திறனாளி நபர் நன்றியை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் அந்த தம்பதியருக்கு 500 பிராங்குளை கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு சுவிட்சர்லாந்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள குறிப்பில், „சுவிட்சர்லாந்து குடிமகனின் அழகான நேர்மையின் கதை இது“ என தெரிவித்துள்ளனர்