• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்ஸ் வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் சிறுவர்கள்!

Nov 18, 2022
Hospital glass building. Mirrored sky and city on modern facade. Health, clinic, emergency, healthcare and medical concept in 3D rendering illustration.

பிரான்ஸில் அதிகமாகக் குழந்தைகளைப் பாதிக்கின்ற மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக மருத்துவமனைகளின் சிறுவர் பகுதிகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சிறுவர் வார்டுகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அரைவாசிப் பங்கு இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளால் நிரம்பியுள்ளது என்ற தகவலைச் சுகாதார அமைச்சர் François Braun வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனைகளில் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக விதிவிலக்கான-வழமைக்கு மாறான – சுகாதார நிலைமைகளின் போது அனுசரிக்கப்படுகின்றOrsan என்ற தேசியத் திட்டத்தை அவர் கடந்த புதன் கிழமை அறிவித்திருக்கிறார்.

சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மூச்சுக் குழல் அழற்சி மிக மோசமாகப் பரவி மருத்துவமனைகளில் நெருக்கடியை உருவாக்கியிருப்பதாக நாட்டின் பொதுச் சுகாதார சேவை தெரிவித்துள்ளது. குழந்தைகளை மட்டுமன்றி பத்து வயதுக்கு மேற்பட்ட சிறார்களிலும் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்கும் சமயத்தில் ஏன் இவ்வாறு இந்த சுவாச அழற்சி நோய் இந்தளவு மோசமாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவரவில்லை.

கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பேணப்பட்டுவந்த பொதுச் சுகாதாரப் பழக்க வழக்கங்கள் சமூக இடைவெளி என்பன திடீரென மாறி வழமை நிலை தோன்றி இருப்பதும் இந்த அழற்சி நோய்த் தொற்று அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நுரையீரலுக்கு மிக அருகில் இருக்கும் சிறிய மூச்சுக் குழாயில் ஏற்படுகின்ற வீக்கமே மூச்சுக் குழல் அழற்சி நோய் (bronchiolitis) எனப்படுகின்றது. அது ஒரு வைரஸ் தொற்று நோயாகும். ஆண்டு தோறும் முப்பது வீதமான குழந்தைகளைப் பாதிக்கிறது. இந்த ஆண்டு அதன் தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்த வைரஸ் குழந்தைகள் மூலமாக வயோதிபர்களுக்குத் தொற்றினால் அது அவர்களுக்கு உயிராபத்தை உண்டாக்கலாம்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் மற்றும் குளிர்காலங்களில் பரவுகின்ற காய்ச்சல் மற்றும் குழந்தைகளில் சுவாச அழற்சி எனப் பல தொற்று நோய்கள் ஒரேசமயத்தில் பரவிவருவதால் நோய் அறிகுறிகளை இனங்காண்பதில் குழப்பங்கள் காணப்படுகின்றன.

மாஸ்க் மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பொதுப் போக்குவரத்துகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படாவிடினும் அதனை அணிவது பாதுகாப்பானது என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed