அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தாயைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
டிரேசி பீட்டி எனும் அந்த 61 வயது நபருக்கு ஹன்ட்ஸ்வில் நகரிலுள்ள சிறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2003ஆம் ஆண்டு கரோலின் கிளிக் எனும் தனது தாயின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த குற்றத்திற்காக 2004ஆம் ஆண்டு பீட்டிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பீட்டி கொள்ளை உள்ளிட்ட இதர குற்றங்களுக்காக ஏற்கனவே சிறைத் தண்டனை அனுபவித்தவர். தனது தாயுடன் சுமூகமான உறவு இல்லாதபோதும் சிறையிலிருந்து வெளியில் வந்த பின்னர் பீட்டி தனது தாயுடன் தங்கினார்.
எனினும் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின்போது வீட்டைவிட்டு வெளியேறச் சொன்ன தனது தாயை பீட்டி அடித்துக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பீட்டி அறிவுத்திறன் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி மரண தண்டனையை ஒத்திவைக்க அவரது வழக்கறிஞர்கள் மனுச் செய்தனர். அந்த மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அவருக்கு விஷ ஊசி செலுத்தித் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பதின்மூன்றாவது கைதி இவராவார்.