• Mo. Nov 25th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வீடு உடைத்து ஏழு பவுண் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு

Okt 7, 2022

கண்டி நகரத்தின் ரஜ வீதியில் வீடு உடைத்து ஏழு பவுண் தங்கம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளுக்கு உதவ வந்த நபரின் பாதணி அடையாளங்கள் மற்றும் கைரேகை அடையாளங்களை கொண்டு திருடனே உதவியாளராக வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கண்டி நகரம் ரஜ வீதியிலுள்ள வீடொன்றை மூடி வைத்துவிட்டு அதன் உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு ஏழு பவுண் தங்கம் மற்றும் இரு லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளன.

உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, செயற்பட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது அருகில் உள்ள கடையொன்றில் பணிபுரியும் நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உதவுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்துள்ளார்.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த டைலில் இருந்த காலணி தடம் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்திய பொலிஸ் அதிகாரிகள் அதை கவனிக்க ஆரம்பித்தனர்.

மழை பெய்த நாள் என்பதால், வெளியில் இருந்து வீட்டுக்கு உதவி செய்ய முன்வந்தவர் திரும்பிய போது, ​​பதிந்திருந்த கால்தடங்கள், முந்தைய காலடித் தடம் போல் தெரிந்ததால், சம்பந்தப்பட்டவரிடம் விசாரிக்க தொடங்கினர். அதன் பின்னரே இந்த நபரே திருட்டில் ஈடுபட்டிருந்தவர் என தெரியவந்தது.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அவர், அருகில் உள்ள கடையில் வேலை பார்த்து விட்டு, இரவில் திரும்பி வந்து கதவை உடைத்து பொருட்களை திருடிச் சென்றதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், தலைமை ஆய்வாளர் பண்டார தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed