பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இந்த கோடையில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பறவைகள், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஐரோப்பாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை காட்டு மற்றும் வீட்டுப் பறவைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்களுக்கமைய, கடந்த இலையுதிர்காலத்தில் இருந்து இதுவரையில் 47.5 மில்லியன் பறவைகள் அழிக்கப்பட்டன.
வடக்கே நோர்வேயின் ஸ்வால்பார்ட் தீவுகள் முதல் தெற்கு போர்ச்சுகல் வரையிலான கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு முதல் கிட்டத்தட்ட 2,500 நோய் சம்பவங்கள் தொடர்பில் அறிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குறிப்பு ஆய்வகம் ஆகியவற்றின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, காட்டு பறவைகளில் ஆயிரக்கணக்கான பறவைகள், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் வடக்கு அட்லாண்டிக் கடற்கரையில் கடல் பறவைகளின் இனப்பெருக்க காலனிகளை அடைந்தது, பெரும் எண்ணிக்கையிலான பறவைகளை கொல்ல காரணமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.