மியான்மரில் 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தை குண்டு ஒன்று துளைத்து பயணியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சியை எதிர்த்து புரட்சி குழுக்கள் பல இயங்கி வருகின்றன. இந்நிலையில் மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லோகாவ்கில் அருகே வானில் 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு துப்பாக்கிக் குண்டு விமானத்தை துளைத்து சென்றுள்ளது.விமானத்திற்குள் புகுந்த அந்த குண்டு அங்கிருந்த பயணி ஒருவரின் கழுத்தில் தாக்கியதால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக விமானம் லோகாவ்கில் தரையிறக்கப்பட்டு, அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விமானத்தை சுட்டது யார் என்பது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது கயா மாநில புரட்சி கும்பலின் வேலை என மியான்மர் ராணுவ அரசு குற்றம் சாட்டிய நிலையில், அப்புரட்சி குழு அதை மறுத்துள்ளது. இந்த சம்பவம் மியான்மரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.