• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.தெல்லிப்பளை துர்காதேவி அடியவர்களுக்கு விடுக்கப்பட்ட‌ அறிவித்தல்!

Aug 27, 2022

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28.08.2022) திகதி காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் உற்சவம் நடைபெறும்.

திருமுறைத் திருவிழா 30.08.2022 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கும், திருமஞ்சத் திருவிழா 02.09.2022ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கும், வேட்டைத்திருவிழா 05.09.2022ம் திகதி திங்கட்கிழமை பி.ப 1.00 மணிக்கும், சப்பறத்திருவிழா 06.09.2022ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிக்கும், தேர்த்திருவிழா 07.09.2022ம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கும் தீர்த்த உற்சவம் 08.09.2022ம் திகதி காலை 8.30 மணிக்கும் நடைபெறும்.

இவ் வருடாந்த உற்சவத்தின் போது பல ஆயிரம் அடியவர்கள் வருவதால் குறிப்பாக மிக தொலைவான பல பிரதேசங்களில் இருந்தும் வருதனால் அடியவர்களின் நலன் கருதி அன்னதானம் வழங்கப்படும். உற்சவம் நடைபெறும் சகல தினங்களும் அன்னதானம் அடியவர்களுக்கு வழங்கப்படும்.

அடியவர்களின் நன்மை கருதி பல விசேட பேருந்துகள் இயக்கப்படும். தற்போது சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் சேவை நேரத்தை பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றியமைத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக கொடியேற்றம், சப்பறம், தேர்த் திருவிழாக்களின் போது இறுதியாக செல்லும் பேருந்து நேரம் பி.ப 8.30 மணிக்கு முன்பதாக இயக்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலய உற்சவத்திற்கு வருகை தரும் அடியவர்கள் ஆலயத்தின் புனிதத் தன்மையினை பாதுகாப்பதுடன் தமிழ் கலாசார ஆடை அணிந்து வருவது அவசியமாகும்

அத்துடன் இவ் உற்சவ காலத்தினைப் பயன்படுத்தி சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ் வருடாந்த உற்சவத்திற்கு வருகை தரும் அடியவர்கள் தமது உடமைகளின் பாதுகாப்பு தொடர்பில் உரிய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த உற்சவ காலங்களில் பல திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்கள் எப்போதும் தம்முடன் எடுத்து வரும் பொருட்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அறியாதவர்கள் மற்றும் முன்பு பழக்கமில்லாதவர்களுடன் அடியவர்கள் தொடர்பை பேணுதல் அவர்களுக்கும் அவர்களது பெறுமதி மிக்க உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இவ் விடையத்தில் மிகுந்த விழிப்புடன் இருப்பது மிக அவசியமாகும்.

மிக அதிகளவான அடியவர்கள் வருகை தரக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் கொரோனா சுகாதரா நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றி தமக்கும் ஏனையவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed