தமிழ்நாட்டில் இருந்து 50 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சிலை தற்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன் தோட்டம் பகுதியில் நந்தனபுரீஸ்வரர் என்னும் இந்து மத கடவுள் சிவன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இருந்து 1971 ஆம் வருடம் கடவுள் பார்வதியின் சிலை உட்பட ஐந்து சிலைகள் திருட்டு போயுள்ளது. இந்த திருட்டு பற்றி 2019 ஆம் வருடம் கோவில் அறங்காவலர் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடத்தப்பட்ட சிலைகள் எங்கு எடுத்து செல்லப்பட்டது என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது திருட்டு போன சிலைகளில் கடவுள் பார்வதியின் சிலை 52 சென்டிமீட்டர் உயரம் கொண்டதாகும். 12 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தை சேர்ந்த இந்த சிலையின் தற்போதைய மதிப்பு 1.61 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் நந்தனபூரீஸ்வரர் சிவன் கோவிலில் இருந்து 1971ம் வருடம் திருடப்பட்ட கடவுள் பார்வதியின் சிலை 50 வருடங்களுக்குப் பின் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கடவுள் பார்வதியின் சிலை இங்கிலாந்தை தலைமை இடமாகக் கொண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் கிளையை கொண்டுள்ள பொன்ஹம்ஸ் என்னும் சர்வதேச ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு சிலை கடத்து தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்திருக்கின்றனர்.
ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்ற அந்த சிலையை மீண்டும் நந்தனபுரீஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவர தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.