அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்ட அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது. இந்த நிலையில் அந்நாட்டில் அமெரிக்க ராணுவத்தின் எந்த பங்களிப்பும் இல்லாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார்.
இதனால் ஆளில்லா விமானத்தை (டிரோன்) எங்கிருந்து அமெரிக்கா இயக்கியது என்பதில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி ஆளில்லா விமானம் இயக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் டிரோன் பாகிஸ்தான் வான்வெளி வழியாக சென்றதாகவும், தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அல்-ஜவாஹிரி, பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
அவர் வசித்த பகுதி பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது.
அதற்காக நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிதியை பெற முயற்சித்து வருகிறது. இதற்கிடையே அல்-ஜவாஹிரியின் நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டதாகவும், இதன் மூலம் அமெரிக்காவிடம் நல்ல பெயர் எடுத்து விடலாம் என்ற காரணத்தால் பாகிஸ்தான் அதற்கு சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து அல்-ஜவாஹிரியின் நடமாட்டம் குறித்து பாகிஸ்தான் தகவல்கள் அளித்து இருக்கிறது. இதுகுறித்து சில நிபுணர்கள் கூறும்போது, அமெரிக்காவிடம் நட்புறவை பெறவும், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவைகளிடம் இருந்து நிதி உதவி பெறவும் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி உள்ளது என்றனர்.