பிரிட்டனை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் சுமார் 104 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
பிரிட்டனை சேர்ந்த எல்சி ஆல்காக் என்ற 104 வயதான பெண் தான் பிறந்த குடியிருப்பில் தான் தற்போது வரை வாழ்ந்து வருகிறார். அதாவது கடந்த 1918 ஆம் வருடத்தில் அந்த பெண் பிறந்து இருக்கிறார். தற்போது வரை நான்கு மன்னர்கள், மகாராணி, 25 பிரதமர்கள் மற்றும் இரண்டு உலகப் போர்களை சந்தித்திருக்கிறார்.
இவரின் வீடு ஹுத்வைட் என்ற நகரில் இருக்கும் பார்க்கர் வீதியில் அமைந்திருக்கிறது. கடந்த 1902 ஆம் வருடத்தில் இவரின் தந்தை அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். 5 பிள்ளைகளில் கடைசி பிள்ளையான இவர் 1941 ஆம் வருடத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் திருமணம் செய்திருக்கிறார்.
அதன் பிறகு தன் கணவரோடு அந்த வீட்டில் வசித்திருக்கிறார். இவரின் தாய் இறந்த பின் தந்தையை கவனித்துக் கொள்வதற்காக கணவருடன் அந்த வீட்டில் வாழ ஆரம்பித்திருக்கிறார். 1949 ஆம் வருடத்தில் அவரின் தந்தையும் உயிரிழந்தார். அதன் பிறகு கடைசியாக 1960 ஆம் வருடத்தில் அந்த குடியிருப்பை சொந்தமாக வாங்கிவிட்டார்.
தற்போது, அந்த குடியிருப்பு மற்றும் நிலத்தின் மொத்த மதிப்பு 75 ஆயிரம் பவுண்டுகள். தன் வீட்டை விட்டு வேறு எங்கும் சென்று தங்குவதற்கான நிலை தனக்கு உண்டாகவில்லை என்றும் இந்த வீடு தனக்கு அனைத்துமாக மாறிப்போனது என்றும் கூறியிருக்கிறார். 104 வயதாகும் இவர் தன் கடைசி மூச்சு உள்ளவரை இந்த குடியிருப்பில் தான் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.