யாழ்ப்பாணம் கோண்டாவிலில் களஞ்சிய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தின் கதவை உடைத்து சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மற்றொருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டுவதாக பொலிஸார் தெரிவித்தனர். திருடிய இலத்திரனியல் பொருள்களை இன்றைய தினம் விற்பனை செய்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில், திருநெல்வேலியில் உள்ள இலத்திரனில் பொருள்கள் விற்பனை நிலைய களஞ்சியம் ஒன்று கோண்டாவிலில் உள்ளது.
கடந்த மாதம் வர்த்தக நிலையத்துக்கு எடுத்து வருவதற்காக கனரக வாகனத்தில் பொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் டீசல் இல்லாமை காரணமாக அது தரித்து வைக்கப்பட்டிருந்தது.
இதன்போதே இரவு நேரத்தில் கனரக வாகனத்தின் கதவை உடைத்து சுமார் 11 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டன. சம்பவம் தொடர்பில் வர்த்தகரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டார்.