உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா மேற்கொண்டுள்ள போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பிற்காக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். சொந்த மண்ணிலேயே காலம் கடத்த விரும்புபவர்கள் ரஷியாவின் ஆயுதங்களுக்கு உயிரை பறிகொடுக்க வேண்டியிருக்கிறது.
அதேநேரம் உக்ரைனும் எளிதில் விட்டு கொடுக்க தயாராக இல்லை. தங்களால் முடிந்த அளவுக்கு ரஷியாவை தடுத்து நிறுத்த போராடி வருகிறது. போரை ரஷியா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகளால் கூட முடியவில்லை. இந்த நிலையில், போரை நிறுத்த கோரி 3 வயது சிறுவன் பாடியுள்ள பாடல் லட்சக்கணக்கானோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
உக்ரைனின் கீவ் நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் லியோனார்ட் புஷ் (வயது 3) என்ற சிறுவன், ஒகியான் எல்ஜி என்ற இசை குழுவுடன் சேர்ந்து போருக்கு எதிரான பாடல் ஒன்றை பாடியுள்ளான்.
அந்நாட்டின் இர்பின் நகரை சேர்ந்த அந்த சிறுவன் பாடிய பாடல் கீவ் நகர மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள திரையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதனை கண்டதும் பார்வையாளர்கள் அமைதியானார்கள்.