பாரிஸ் நகரின் மையப் பகுதியில் புதியபாலம் (Pont Neuf) மீது நேற்று நள்ளிரவு கார் ஒன்றின் மீது காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்தார்.
பாலத்தில் வாகனங்கள் செல்லும் ஒரு வழிப்பாதையில் எதிர்த் திசையில் செலுத்தப்பட்ட காரை சோதனைக்காக காவல்துறையினா் வழிமறித்த சமயம், சாரதி காரை நிறுத்தாமல் காவல்துறையினரை நோக்கிச் செலுத்த முற்பட்டார் என்றும் பாதுகாப்புக்காக காவல்துறையினா் கார் மீது சுட நேர்ந்தது என்றும் காவல்துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சாரதியும் அவரோடு மற்றொருவருமே சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். காரில் பின்னால் இருந்த பெண் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதிபர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு ஈபிள் கோபுரப் பகுதியில் மக்ரோனின் வெற்றி உரை முடிவடைந்த சிறிது நேரத்தில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
தேர்தல் முடிவுக்கு எதிராக பாரிஸ் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதால் நகரில் காவல்துறை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டிருந்தன. அந்த சமயத்தில் இடம்பெற்ற இந்த சூட்டுச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக் குற்றங்களை விசாரிக்கின்ற காவல்துறைப் பிரிவினர் விசாரித்துவருகின்றனர்.
இதேவேளை – தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திப் பாரிஸ், துளுஸ், லியோன் போன்ற பெரு நகரங்களில் நேற்றிரவு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.