இளம் வெளிநாட்டவர்கள் பலர், தங்களுக்கு சுவிஸ் பாஸ்போர்ட் வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக ஆச்சரியமூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கும் ஒரு நிலை இன்னமும் இருக்க, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டு இளைஞர்களோ, தங்களுக்கு சுவிஸ் பாஸ்போர்ட் வேண்டாம் என முடிவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
அதிலும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் அவர்களில் பலர் சுவிட்சர்லாந்திலேயே பிறந்தவர்கள்!
ஆக, சுவிட்சர்லாந்திலேயே பிறந்து, சுவிஸ் குடியுரிமை பெறும் தகுதியுடையவர்கள் கூட, தங்களுக்கு சுவிஸ் பாஸ்போர்ட் வேண்டாம் என முடிவெடுப்பதற்கு என்ன காரணம்?
ஐரோப்பிய நாடுகளிலேயே சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறைதான் மிகவும் கடினமான ஒன்றாகும். அதற்கு, பெடரல், மாகாண மற்றும் உள்ளூர் மட்டத்தில் பல விதிமுறைகள் இருக்கும், அது ஒரு காரணம்…
பெடரல் புலம்பெயர்தல் ஆணையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், குடியுரிமை பெறும் தகுதியுடையவர்களில் சிலர் மட்டுமே அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது தெரியவந்துள்ளது.
அதற்கான காரணங்களில் ஒன்று, சுவிஸ் புலம்பெயர்ந்தோரில் பலர் ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்கள். ஆகவே, அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால், அவர்கள் சுவிஸ் குடிமக்களாக ஆகுவதற்கான அவசியம் இல்லை என அவர்கள் கருதுவதாக தெரிவிக்கிறார் பெடரல் புலம்பெயர்தல் ஆணைய இயக்குநரான Walter Leimgruber.
அதாவது வாக்களிக்கும் உரிமை மட்டுமே தங்களுக்கு இல்லை, மற்ற உரிமைகள் எல்லாம் இருக்கின்றன. அப்படியானால் எதற்காக தேவையில்லாமல் கடினமான நடைமுறைகளைக் கொண்ட சுவிஸ் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கவேண்டும் என அவர்கள் கருதுகிறார்களாம்!