• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகின் மிகப் பெரிய விமானத்தை அழித்தது ரஷ்யா

Feb 28, 2022

உக்ரைன் நாட்டில் நான்கு நாட்களைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், தலைநகர் கீவ் நகர் அருகே உள்ள விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகிலேயே மிகப் பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 

இருப்பினும், உக்ரைன் கண்டிப்பாக இந்த விமானத்தை மீண்டும் கட்டியெழுப்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகப் பெரிய விமானமான AN-225 ‚Mriya‘ உக்ரைன் ஏரோநாட்டிக்கல் நிறுவனமான அன்டோனோவ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 

‚Mriya‘ என்றால் உக்ரைன் மொழியில் ‚கனவு‘ என்றே பொருள். இந்த விமானம் கடந்த 1985ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 

30 சக்கரங்கள், 6 இன்ஜின்கள், 290 அடி இறக்கைகளுடன் தயாரிக்கப்பட்ட இது உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் என்ற சிறப்பை பெற்றது. 

சரக்கை ஏற்றுக் கொண்ட இந்த விமானத்தால் 4,500 கிமீ வரை செல்ல முடியும்.

இந்த விமானம் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் இந்த விமானம் முற்றிலும் எரிந்து சாம்பலானதாக அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். 

மேலும், „ரஷ்யா எங்கள் மிகப் பெரிய விமானத்தை அழித்தாலும். அவர்களால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய நாடு என்ற எங்கள் கனவை அழிக்க முடியாது“ என ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக உக்ரைன் அரசும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 

„உலகின் மிகப்பெரிய விமானமான „மிரியா“ (கனவு) ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் கிய்வ் அருகே உள்ள விமான நிலையத்தில் அழிக்கப்பட்டது. 

நாங்கள் நிச்சயம் அந்த விமானத்தை மீண்டும் உருவாக்குவோம். வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் என்ற கனவை நிச்சயம் அடைவோம்“ என்று பதிவிட்டுள்ளது. 

மேலும் பகிரப்பட்ட அந்த விமானத்தின் படத்தில், „அவர்கள் மிகப்பெரிய விமானத்தை எரித்தனர், ஆனால் எங்கள் மிரியா ஒருபோதும் அழியாது“ என்று தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed