கனடாவின் விமான நிலையத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொரோண்டோவின் பியர்சன் விமான நிலையத்திலே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறையினர் தொடர்புபட்டிருப்பதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தினை அண்டிய சில வீதிகள் மூடப்பட்டுள்ளன.
இரண்டு அல்லது மூன்று பேருக்கு இடையிலான மோதல் சம்பவமொன்று தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலை தடுக்க காவல்துறையினர் முயற்சித்த போது ஒருவர் துப்பாக்கியை பயன்படுத்த முயற்சித்தார் எனவும் இதன் போது காவல்துறையினர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.