யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை அமைப்பதற்கான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரி மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
மண்டைத்தீவு பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கு பிராந்தியத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான ஆரம்ப திட்டங்கள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியினால் வடக்கு மாகாணத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கப்பெருவதோடு, கிரிக்கெட் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய அவர்கள் மைதானத்தின் கட்டுமானத்திற்காக நிதி உதவி வழங்குமாறு கடந்த வாரம் வருகை தந்த இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.