• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில். 35 ஆண்டுகளின் பின் திறக்கப்பட்ட வீதி

Apr. 10, 2025

யாழ்ப்பாணம். வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது.

அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த வீதியானது இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் , பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டப்பட்டுள்ளது.

குறித்த வீதி ஊடாக காலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே மக்கள் பயணிக்க முடியும்.

.வீதியால் பயணிப்போருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில்,

1. வீதி திறக்கப்படும் நேரம் மு.ப 06.00 தொடக்கம் பி.ப 05.00 வரை மாத்திரமே.

2. வீதியினுள் பயணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல், திருப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

3. வீதியில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல் ஒளிப்பதிவு செய்தல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.

4. இந்த வீதியில் நடைபயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. 

5. பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் தவிர்ந்த ஏனைய பாரவூர்திகள் பயணிக்கத் தடை.

6. இந்த வீதியில் செல்லக்கூடிய வேகம் ஆகக்கூடியது 40 கி.மீ மாத்திரமே.

7. இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைவரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆவணங்களை பயணத்தின் போது வைத்திருத்தல் அவசியமாகும்.

மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை மீறுதல் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றமாகும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தல் பதாகை வீதியில் தமிழ் மொழியில் எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிகிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் , இன்றைய தினம் வீதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 8 people and motorcycle
May be an image of 2 people, road and windmill

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed