• Do.. März 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மாசி மகத்தில் புனித நீராடினால் இத்தனை புண்ணியங்களா?

März 13, 2025

மாசி மகம் அன்று கோவில் குளங்கள், புனித தீர்த்தங்கள், புனித நதிகள், கடல் போன்றவற்றில் புனித நீராடினால் பல ஜென்ம பாவங்கள் தீரும். நன்மைகள் அதிகரிக்கும் என்பார்கள். இந்த நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் எழுந்தருளி இருப்பதாகவும் சொல்கிறார்கள். மாசி மகத்தன்று புனித நீராடினால் பாவங்கள் தீரும் என நம்பப்படுகிறது. 

குரு சந்திர யோக நாள்

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழு. ராசிகள் 12. இந்த 27 நட்சத்திரத்தில் 10வது நட்சத்திரம், (கர்ம நட்சத்திரம்) மகம். பதினோராவது ராசி கும்ப ராசி. மகம் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க, கும்ப ராசியில் இருந்து சூரியன் சந்திரனை பார்க்கும் காலமே புனிதமான “மாசி மகம்” உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. குரு, சந்திரனை பார்ப்பதால் மிகப் பெரிய குரு சந்திர யோகம் ஏற்படுகின்றது.

கால புருஷனுக்கு 5 வது ராசியான சிம்ம ராசி பூர்வ புண்ணிய ராசியாகும். சூரியன் ஆன்மா. சந்திரன் மனம். உடல் என்றும் சொல்வார்கள். இந்த மாசி மகத்தில் நீராடுவதால், நீருக்கு காரணமான சந்திரன் மூலமாக, உடல் தூய்மையும், சூரியன் மூலமாக ஆன்ம தூய்மையும் கிடைக்கிறது. சந்திரன், சிம்ம ராசியில் கேதுபகவானின் மகம் நட்சத்திரத்தில் இருக்கும் பொழுது இந்த மாசி மகம் வருவதால், இந்த நீராட்டம் செய்கின்ற பொழுது நம்முடைய கர்ம வினைகள் தீர்த்து விடுகின்றன.

மாசிமக காலத்தில் புனித நீராடுவதும், புண்ணிய யாத்திரை செய்வதும், புனித கோயில்களைத் தரிசிப்பதும், பாவங்களைப் போக்கும். புண்ணியங்களை அதிகரிக்கும். தோஷங்களை நீக்கி, நீடித்த நல் வாழ்வைத் தரும்.

திருமலையில் கூட பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் சக்கர தீர்த்தம் நடைபெறும். சைவத்தில், இதனை தீர்த்தவாரி என்பர். பிரம்மோற்சவம் எனப்படும் பெருவிழாவின் நிறைவு நாளில் மட்டுமல்லாது வேறு சில நாட்களிலும் தீர்த்தவாரி நடைபெறும். கிரகண காலங்களிலும், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி முதலிய நாட்களிலும் தீர்த்தவாரி விழா நடைபெறும்.

பொதுவாகவே சூரியன் கும்ப ராசியில் இருக்கக்கூடிய மாசிமாதம் முழுக்கவே புனித நீராடலுக்கு மிக உயர்ந்த மாதம் என்று சொல்லப் பட்டாலும், மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினம் மகம் நட்சத்திரத்தில் வருவதால், பௌர்ணமி நீராடல் என்பது மிக மிகத் தூய்மையானதாகவும், புண்ணியம் ஆனதாகவும் கருதப்படுகிறது.

இந்த பௌர்ணமி தினமானது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். இதை „மகாமகப் பெருநாள்“ என்று கொண்டாடுகிறோம். மகாமகத்தை பேச்சு வழக்கில் „மாமாங்கம்“ என்று கூறுகின்றனர்.

மாசிமகம் கும்பகோணத்தில் ஏன் விசேஷம்

கும்பகோணம் மிகச் சிறந்த புனிதத் தலமாக ஆதிகாலத்திலிருந்து கருதப்படுகிறது. அங்கே மகாமக குளம் இதற்கென்றே உருவாக்கப்பட்டது. மகாமக தீர்த்தம் „அமிர்த தீர்த்தம்“ என்று சொல்லப்படுகின்றது. மகாமக தீர்த்தத்தில் நீராடி வணங்கினால் மறுபிறப்பற்ற அமரத்துவம் அடையலாம் என்று புராண நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

மாசி மகத்தில் புனித நீராடினால் இத்தனை புண்ணியங்களா! | By Taking A Holy Dip In The Holy River

மாசிமகம் என்றதும் நினைவுக்கு வரும் கும்பகோணத்தில் புனிதமான மகாமகக்குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி 16 மண்டபங்கள் உள்ளன. அதில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாளேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திஹேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஸ்வரர், உமைபாகேஸ்வரர், நைருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதரேஸ்வரர், முக்த தீர்த்தேஸ்வரர், க்ஷேத்ரபாலேஸ்வரர் ஆகிய 16 வகையான லிங்கங்கள் அருள்பாலிக்கின்றனர்.

இங்குள்ள சிவன் கோயில்களுக்கு தலைமையாக கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. 15 ஏக்கர் பரப்புள்ள இக்குளத்தை உருவாக்கியவர் அச்சுதப்ப நாயக்க மன்னரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இந்நகரில் ஏழு குளங்கள், மூன்று கிணறுகள், நான்கு காவிரித் தீர்த்தங்கள் உட்பட 14 தீர்த்தங்கள் உள்ளன.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed