அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்துச் சம்பவமானது நேற்றிரவு(31.01.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து நேற்று(31) மாலை 6.30 மணியளவில் லியர்ஜெட் 55 என்ற விமானம் புறப்பட்டுள்ளது.
குறித்த விமானம் மிசோரியில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் – பிரான்சன் தேசிய விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தரையில் விழுந்து வெடித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதன்போது, குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்துச் சிதறியதால், மேலும் சிலர் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தை எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ள பிலடெல்பியா அவசர மேலாண்மை அலுவலகம், வடகிழக்கு பிலடெல்பியாவிலுள்ள காட்மேன் மற்றும் பஸ்டில்டன் அவென்யூ இடையே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சாலை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த புதன்கிழமை(29) இரவு வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே பயணிகள் விமானமும் இராணுவ ஹெலிகாப்டரும் மோதிய விபத்தில் 67 பேர் பலியாகினர்.
இந்த நிலையில், மற்றொரு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.