யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
அண்மைய சில நாட்களில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் இது வரையிலான தரவுகளின் அடிப்படையில் 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 121 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர். ஏனைய ஏழு பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.
நோய் தொற்றுக்கான காரணம்
எலிக்காய்ச்சல் என கூறப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் என்பது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும், இது சூறாவளி அல்லது வெள்ளத்திற்குப் பிறகு மக்கள் அசுத்தமான நீரில் நடந்து அலையும் போது அல்லது அதை குடிக்க அல்லது குளிக்க பயன்படுத்தும் போது பரவும் நோயாகும்.
யாழ்ப்பாணத்தில் கடந்த நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து இந்நோய் பரவல் அதிகரித்துள்ளது.
லெப்டோஸ்பைரோசிஸ் பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளான எலிகள். நாய்கள், கால்நடைகளான ஆடுகள்,மாடுகள் , பன்றிகள் போன்றவரின் எச்சங்கள் , கழிவுகள் வெள்ள நீருடன் கலந்து , கிணறுகள் , நன்னீர் தேக்கங்கள் , குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கலந்து விடுவதனால் , அந்த நீரினை பயன்படுத்துபவர்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.
அந்த நீரை பருகுவதால் மாத்திரமின்றி , கால்கள் , கைகளில் காயங்கள் உள்ளவர்கள் அந்த நீரினால் கை கால்களை கழுவும் போது , அவர்களையும் நோய் தாக்க கூடும். அது மாத்திரமின்றி கண்கள், மூக்கு போன்ற மென்சவ்வினூடாக கூட நோய் தொற்று ஏற்பட கூடிய சாத்திய கூறுகள் உண்டு.
நோய் அறிகுறிகள்
அதிக காய்ச்சல், நடுக்கம் மற்றும் தலைவலி ஆகியவை லெப்டோஸ்பைரோசிஸின் அறிகுறிகளாகும். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் செயலிழப்பு, மூளைக்காய்ச்சல், சுவாசக் கோளாறு ஆகியவற்றிற்கு வழிவகுத்து உயிரிழப்புக்களை ஏற்படுத்தும்.
அதனால் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை வழங்கும் சந்தர்ப்பத்தில் நோயினை பூரணமாக குணமாக்க முடியும். எனவே காய்ச்சல் தொடர்பில் அசமந்தமாக இருக்காது வைத்தியர்களை நாடி சிகிசிச்சை பெறுமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பாதிப்பு அதிகமான இடங்கள்.
யாழ்ப்பாணத்தில் நான்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலையே நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி மற்றும் சாவகச்சேரி ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலையுமே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.