• Do. Dez 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாண மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

Dez 11, 2024

எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு மருந்துகளை அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் பெற்றுக்கொள்ளலாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்றையதினம் (11-12-2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் 
 யாழ்
. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின்னர் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒரு வகையான காய்ச்சல் பரவி வருகின்றது.

இக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நான்கு இறப்புக்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இரண்டு இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராக காணப்படுகின்றனர். இறந்தவர்கள் எல்லா இறப்புக்களும் சுவாசத்தொகுதி பாதிப்பினாலேயே ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்த காய்ச்சலுடன் நவம்பர் மாதத்தில் 12 நோயாளர்களும் டிசம்பர் மாதத்தில் 21 நோயாளர்களுமாக மொத்தமாக இதுவரை 33 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை! | Jaffna Rat Fever Director Health Services Warning

தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இந்தக் காய்ச்சலுடன் 20 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இக் காய்ச்சலானது எலிக் காய்ச்சலாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இந்த காய்ச்சல் எந்த வகையானது என்பதை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கும் குருதி மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எலிக்காய்ச்சலானது மழை வெள்ளத்தில் எலி, ஆடு, மாடு போன்ற விலங்குகளின் எச்சங்கள் கலப்பதன் மூலம் இந்நோய்க்கிருமிகள் வெள்ள நீரினில் கலக்கின்றன.

பொதுமக்கள் இந்த வெள்ளநீருடன் தொடுகை ஏற்படும் போது அவர்களது தோலிலுள்ள சிறு காயங்கள், புண்கள் மூலம் உடலின் குருதிச் சுற்றோட்ட தொகுதியை சென்றடைந்து எலிக்காய்ச்சல் நோய் உண்டாகிறது.மேலும் இக்கிருமிகள் கலந்த அசுத்தமான நீரைப் பருகுவதனாலும் எலிக்காய்ச்சல் நோய் ஏற்படலாம். இக்காய்ச்சலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்வரும் விடயங்களை பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

  • காய்ச்சல் ஏற்பட்டால் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலையை நாடவும்.
  • காய்ச்சல் ஏற்பட்டு தாமதமாக அரச வைத்தியசாலைகளுக்கு வருகை தந்தமையினாலேயே பெரும்பாலான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
  • தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி நேரடியாக மருந்தகங்களில் மருந்துகள் வாங்கிப் பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளவும்.
  • தற்போதைய காலப்பகுதியில் அவசியமின்றி வெள்ள நீரில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ளவும்.
  • வயல்கள் சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் கால்களுக்கு பாதுகாப்பு அங்கிகளை அணிந்துகொள்ள வேண்டும்.
  • கால்களில் காயங்கள் அல்லது புண்கள் உள்ளவர்கள் வெள்ள நீரில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ளவும்.
  • கட்டாயமாக கொதித்து ஆறிய நீரைப் பருகவும்.
  • வெள்ள நீரினால் அசுத்தமான கிணறுகளை இறைத்து குளோரின் இடவும்.
  • தற்போதைய காலப்பகுதியில் வெள்ள நீரால் நிரம்பியுள்ள குளங்களில் குளிப்பதை தவிர்த்துக்கொள்ளவும்.

பொதுமக்கள் மேற்படி ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed