பனிப் பொழிவினால் சூரிச் விமான நிலையத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
கடுமையான பனிப்பொழிவினால், நேற்று மதியம் முதல் சுவிஸ் வீதிகள் மற்றும் ரயில் போக்குவரத்தில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த நிலையில் நேற்று மாலை சூரிச் விமான நிலையமும் பனிப் பொழிவினால் செயலிழக்கத் தொடங்கியது.
இதனால், விமான போக்குவரத்து தற்காலிகமாக முற்றிலும் நிறுத்தப்பட்டது.
மாலை 6 மணிக்குப் பிறகு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது, எந்த விமானமும் புறப்பட முடியவில்லை.
இதனால் விமானங்களின் பயணங்களில் தாமதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன, மேலும் சில விமானங்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசெலுக்கு அருகிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலும் பனிப்பொழிவினால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பல ஈஸிஜெட் விமானங்கள் ஜெனிவாவிற்கு திருப்பி விடப்படுகின்றன.
பனி காரணமாக ஒரு விமானம் தரையிறங்க முயன்று முடியாத நிலையில், திரும்பிச் சென்றுள்ளது.
பனிப்பொழிவால் ரயில் சேவை கடும் பாதிப்பு!
பனிப்பொழிவினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் SBB யின் செயலியும் செயலிழந்ததால் பயணிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகினர்.
சுவிட்சர்லாந்து முழுவதும் பனிப்பொழிவினால், ரயில் போக்குவரத்து கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று SBB யின் செயலியும் இயங்காமல் கோளாறு என காண்பித்தது.
இதனால் தங்கள் பயணத்தை திட்டமிடுவதில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
எனினும், SBB யின் செயலி நேற்று மாலை 6.30 மணிக்குப் பின்னர் இயங்கத் தொடங்கியுள்ளது.
அதிகளவு மக்கள் செயலிக்குள் நுழைந்ததால் சேவர் செயலிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பல ரயில் சேவைகள் பனிப்பொழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக SBB அறிவித்துள்ளது.
இதனிடையே வீதிகள் பனியினால் மூடப்பட்டுள்ளதால், பஸ்சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலையுடன், சூரிச்சில் பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
ட்ராம் சேவை ஒழுங்கின்றி இடம்பெற்றது.
பேர்ன், பாசல் போன்ற ஏனைய நகரங்களிலும் தரைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுப் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Solothurn நகரில் நேற்றிரவு 8 மணியுடன் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
இன்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்படலாம் என SBBஅறிவித்துள்ளது.