நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்து குறிப்பிட்ட நாட்களுக்கு நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 -ம் திகதி இலங்கை மற்றும் தமிழகம் இடையே செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.
பின்னர், வடகிழக்கு பருவமழை காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், இரு நாடுகளை சேர்ந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆகஸ்ட் 16-ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
இந்த கப்பல் சேவை வாரத்தின் அனைத்து நாட்களுக்கும் இயக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், பயணிகள் அதிகளவு வராததால் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களில் மட்டும் கப்பல் போக்குவரத்து இயங்கி வந்தது.
பின்னர், பயணிகள் எண்ணிக்கை அதிகமானதால் நவம்பர் 8-ம் திகதி முதல் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட 5 நாட்கள் கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வானிலை காரணமாக நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை வரும் 19ம் திகதி முதல் டிசம்பர் 18ம் திகதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் கப்பல் சேவை இயக்கப்படும். இந்த திட்டங்களில் மாற்றம் இருந்தால் தெரியப்படுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.