மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை (23) இரவு முதல் இன்று வியாழன் (24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம், சௌதார், எழுத்தூர், மூர்வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக முப்பது குடும்பங்களும் தற்போது எழுத்தூர் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் பல பாகங்களிலும் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற மக்கள் கிராம நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனர்த்தம் சம்பந்தமாக உடனடியாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகர்களின் கவனத்திற்கு கொண்டு வருமாறு வருமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.