நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்பரவல் மீண்டும் தீவிரமாக அதிகரித்துள்ளது. இவ்வருடத்தில் நிறைவடைந்த 26 நாட்களில் மாத்திரம் 6923 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனரத்ன தெரிவித்தார்.
அதனபடி மேல்மாகாணத்தில் மாத்திரம் 50 சதவீதத்திற்கும் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் -19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. டெங்கு நோய் பரவல் குறித்து பொது மக்கள் மத்தியில் அலட்சிய போக்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த டிசெம்பர் மாதம் மாத்திரம் 8966 பேர் டெங்கு நோய் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள். மேலும் நுவரெலியா, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி, புத்தளம், இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 2 வகையில் திரிபடைந்த டெங்கு வைரஸ் தொற்று தற்போது 3ஆவது வகையில் திரிபடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இன்னிலையில் தொடர் காய்ச்சல் காணப்பட்டால் 24 மணித்தியாலத்திற்கு பிறகு கட்டாயம் வைத்தியரை நாடுவது அவசியமாகும்.
காய்ச்சல்,உடம்பு, வலி,சோர்வு ஆகிய அறிகுறிகளை அலட்சியப்படுத்திக் கொள்ள வேண்டும்.டெங்கு நோய் இலங்கையில் மரணத்தை ஏற்படுத்தும் ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதை பொது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மக்கள் நன்கு அறிவார்கள் என கூறிய அவர், கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் டெங்கு நோய் தாக்கம் தீவிரமடைவதை தடுக்க பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.