மேற்குலக அரசியல் பிரமுகர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்திகளின் பின்னணியில் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் வழமையான உற்சாகத்துடன் பொங்கலிட்டு தமிழர் திருநாளை கொண்டாடியுள்ளனர்.
ஒஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கோடைகால பண்டிகையாகவும் ,ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் குளிர்காலப் பண்டிகையாகவும் வழமைபோலவே இன்றைய பொங்கல் நாள் அமைந்துள்ளது.
புலம்பெயர் நாடுகளின் ஆலயங்களிலும் இன்று பொங்கல் நாளை முன்னிறுத்திய சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த மாதம் மரபுரிமை திங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் பொங்கல் விழா சிறப்பு பெறுகின்றது.
குறிப்பாக லண்டன் பெருநகரப் பிராந்தியத்தின் ஆட்சி மன்றத்தால் இந்த முறை முதன் முறையாக தமிழர் மரபுரிமை திங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் பிரித்தானிய வாழ் தமிழ் சமூகம் உற்சாகத்துடன் இந்த நாளை பெருமைப்படுத்தியுள்ளது.
லண்டன் ஈலிங் கனகதுர்க்கை ஆலயத்தில் இன்று இடம்பெற்ற வழிபாடுகளில் லண்டன் பிராந்தியஅமைச்சர் போல் ஸ்கலியும் கென்வவெட்டிவ் கட்சி பிரமுகர்களும் பங்கெடுத்துள்ளனர்.
இதேபோல, லண்டன் வெம்பிலி பகுதி சனசமுக நிலைய முன்றலில் லண்டன் தமிழ் வணிகர்கள் பொங்கல் விழாவை நடத்தியிருந்தனர். சில புலம்பெயர் அமைப்புகளின் பொங்கல் விழா நிகழ்வுகள் நாளையும் இடம்பெறவுள்ளன.
அந்தவகையில், லண்டன் சோஆஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இந்த விழாவில் பொங்கலுடன் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய பண்டிகை நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
இதேபோல பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரித்தானிய தமிழ் சமூக அமைப்பினரால் எதிர்வரும் 17 ஆம் திகதி மாலை இந்த விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.