• Mi. Nov 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

Nov 7, 2023

நடந்து முடந்த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக  கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுசில் பிரேமஜயந்த இவ்வாறு கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடந்து வருகின்றன. சில பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி 60 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

80 சதவீத பாடசாலை சீருடைகள் இலவசமாக எமக்கு கிடைக்கவுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதே எமது இலக்காகும். 

உலக உணவு வேலைத்திட்டம், USAID மற்றும் தனியார் துறையினரும் இதற்காக வழங்கும் ஆதரவை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கான பல்வேறு திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம்.

இந்த வேலைத் திட்டத்திடத்திற்காக ஒரு நிதியத்தை ஆரம்பிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சை ஆகியவற்றுக்குப் பிறகு மாணவர்களுக்கு ஆங்கில மொழி, திறன் விருத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை பயிற்சிகளை வழங்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளது. என தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படும் எனவும் அதன்படி, அடுத்த வருடத்தில் இருந்து, தரம் ஒன்று முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக புதிய தவணைக்காக இந்த வருடம், மார்ச் மாதம் பாடசாலைகளை கால தாமதமாகவே ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

ஆனால் அந்தத் தாமதங்களைக் குறைத்து இதன் ஊடாக 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை வழமை போன்று நடத்த முடியும். மேலும், நீதிமன்ற நடவடிக்கைகள் காணப்பட்டாலும் கூட அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் என்று நான் நினைக்கின்றேன்.

நேரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, தற்போது தாமதமாக நடத்தப்படும் அனைத்துப் பரீட்சைகளையும் கட்டம் கட்டமாக நடத்துவதன் மூலம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டாகும் போது குறித்த வருடத்திற்குரிய பரீட்சைகளை அதேவருடத்தில் நடத்தி முடிக்க அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோன்று, 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக சுசில் பிரேமஜயந்த இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும் மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின் கீழ் உள்ள கல்வி அமைச்சினாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த அனைத்து நிதிகளையும் ஒன்று சேர்த்தே அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கும் முழுமையான தொகையைக் கணக்கிட வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed