புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து சனிக்கிழமைகளில் தளிகை போட்டு வணங்கி வருவது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம்.
அவ்வாறு வழிபடும் போது பெருமாளின் பரிபூரண ஆசியை பெறுவதோடு சனிபகவானின் தாக்கத்திலிருந்தும் விடுபடலாம்.
இந்த சனிக்கிழமையில் பெருமாளுக்கு விரதம் இருந்து தளிகை போடுபவர்கள் அவரவருக்கு முறைகளில் வழிபாடு செய்து கொள்ளலாம். புரட்டாதி மாத சனிக்கிழமையில் நாம் பெருமாளை வழிபடுவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
புரட்டாதி மாதச் சனிக்கிழமை பெருமாளை வணங்கும் முறைப் பற்றி நோக்குவோம்.
ஒரு கலச சொம்பை தயார் செய்து கொள்ள வேண்டும். இது சில்வர், இரும்பு தவிர்த்து மற்ற பொருட்களால் ஆன சொம்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதில் சுத்தமான தண்ணீரை பாதியளவு நிரப்பிய பிறகு ஒரு கைப்பிடி நிறைய துளசியை அதில் போடுங்கள். அதன் பிறகு கொஞ்சம் மஞ்சள், குங்குமம், விபூதி மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
இப்போது இந்த சொம்பை பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு முன்பாக வைத்து அதன் மேல் தேங்காயை வைக்க வேண்டும். இப்படி கலசம் வைத்த பிறகு அந்த கலசத்திற்கு முன்பாக ஒரு அகல் தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
இதற்கு நல்லெண்ணெய் நெய் என எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புரட்டாசியில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இந்த கலச வழிபாட்டை செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் ஆசி கிடைக்கும்.
இப்படி வழிபடுவதோடு இந்த சனிக்கிழமையில் நாம் செய்யும் சில தானங்கள் நம்மை சனியின் பார்வையிலிருந்து காப்பாற்றும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு நாம் கலசம் வைத்து வழிபட்ட பிறகு பச்சரிசியில் தயிர் கலந்து தயிர் சாதமாக செய்து அதை தாளிக்காமல் பெருமாளுக்கு படைத்த பிறகு அதை தானமாக கொடுக்க வேண்டும்.
இத்துடன் வஸ்திர தானமும் செய்ய வேண்டும் இதை வயதில் முதியவர்களுக்கு கொடுப்பது மிகவும் சிறந்தது. இந்த கலச வழிபாட்டோடு இந்த தான முறையையும் பின்பற்றும் போது பெருமாளின் அருளாசியோடு, சனியின் தாக்கத்திலிருந்தும் தப்பித்து கொள்ளலாம் என்பது தான் இந்த வழிபாட்டின் முக்கிய அம்சம்.