இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் பலியானதாகவும், 86 பேர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் உள்ள இர்சல்வாடி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த தேடலில் மேலும் 6 உடல்களை மீட்புக் குழுக்கள் மீட்டனர். உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் இருந்துள்ளனர்.
அத்துடன் இன்னும் 86 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராய்காட் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்தின்படி, 229 கிராமவாசிகளில் 22 பேர் இறந்தனர், 10 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமானவர்களில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கனமழை காரணமாக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற அரசு அமைப்புகள் மாலை 6 மணியளவில் மீட்புப்பணியை நிறுத்திவிட்டதாக NDRF அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் தங்களது 4 குழுக்கள் சனிக்கிழமை காலை செயல்பாட்டை மீண்டும் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.