யாழில் தனியார் கல்வி நிலையங்களுக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை வழங்குதல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டச் செயலரைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாட தனியார் கல்வி நிலைய நிர்வாகிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் சங்கிலியன் மன்றத்தில் நேற்று (5) தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் கலந்துரையாடலொன்றை நடாத்தியுள்ளனர்.
இதில் 50க்கு மேற்பட்ட தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டு மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தரம் ஒன்று முதல் ஒன்பது வரையான வகுப்புகளுக்கு வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் வகுப்புக்கள் நடாத்தப்படக்கூடாது என மாவட்ட செயலர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது.
இது இந்த மாதம் 1ம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுமென தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை இத் தீர்மானத்தின் படி வெள்ளிக்கிழமைகளில் முழுமையாக வகுப்புக்களை நிறுத்தும் தருணம் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12 மணி்குப் பிறகு வகுப்புக்களை நடாத்த அனுமதிக்க வேண்டுமென மாவட்ட செயலரிடம் கோருவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அனைத்து தனியார் கல்வி.நிலைய நிர்வாகிகளும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.