ஐரோப்பிய நாடுகளில் ஒன்று குரோஷியாவிற்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சுற்றுலா சென்று வருகின்றனர்.
இந்நிலையில் குரோஷியா நாட்டில் உள்ள டுப்ரோவ்னிக் (Dubrovnik) என்ற நகரத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இனி சூட்கேஸ்களை எடுத்து வரக்கூடாது என புதிய விதிமுறைகளை நகர மேயர் அறிமுகப்படுத்யுள்ளார்.
அங்கு செல்லும் பயணிகள் சக்கரம் பொருந்தி இருக்கக்கூடிய சூட்கேஸ்களை பளிங்குக்கற்களால் ஆன பாதைகளில் இழுத்துச் செல்லும்போது ஏற்படும் சத்தம் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துவதால் நகரத்தில் வசிக்கும் மக்களின் தூக்கம் பாதிக்கப்படுவதாக நீண்ட நாட்களாக புகார் அளித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அந்நகரத்தின் மேயர் Mato Frankovic சூட்கேஸ்களை எடுத்து வருவதற்குத் தடையை விதித்திருக்கிறார். அதேவேளை தடையைக் கடைபிடிக்காத சுற்றுலா பயணிகளுக்கு $288 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் மேயர் தெரிவித்திருக்கிறார்.
அதேவேளை சுற்றுலாப் பயணிகள் எடுத்து வரும் சூட்கேஸ்கள் நகரத்திற்கு வெளியே சேகரிக்கப்பட்டு பின்னர் அவர்கள் தங்கியிருக்கும் முகவரிகளுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அந்நகரத்திற்கு வரும் பயணிகள் தங்களுடன் அழைத்து வரும் செல்லப் பிராணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், சுற்றுலாத் தளங்களைப் பார்வையிடும்போது சரியான முறையில் உடை அணிந்திருக்க வேண்டும் என்றும் நகர மேயர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த விதிமுறைகள் அனைத்தும் வரும் நவம்பர் மாதம் முதல் அமுலுக்கு வருமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.