இந்திய மாநிலம் கேரளாவில் உல்லாச படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவல்திரம் கடற்கரையில், இரண்டு அடுக்கு சுற்றுலா படகு ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது.
தனூர் பகுதியில் இரவு 7 மணியளவில் படகு சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த திடீர் விபத்தில் கடலில் மூழ்கி 9 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில் ஐந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர். மேலும் சிலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சில பயணிகள் கடலில் மூழ்கி மயமானதால் அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் சுற்றுலா படகு பயணம் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 மணி வரை சவாரி மேற்கொள்ளப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ள டீவீட்டில், ‚கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். உதவித் தொகையாக ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் PMNRFயில் இருந்து 2 லட்சம் வழங்கப்படும்‘ என தெரிவித்துள்ளார்.