• Di.. Apr. 29th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அட்சய திருதியை 2025

Apr. 29, 2025

அக்ஷய திருதியை இவ்வாண்டு ஏப்ரல் 30, 2025 பொன்னான புதன்கிழமை அன்று மூன்று யோகங்களுடன் கூடி வருகிறது. இது ரொம்பவும் சிறப்பு வாய்ந்த நன்னாளாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகிறது. 

சித்தயோகம், ஷோபன யோகம், ரவி யோகம் ஆகிய இந்த மூன்று யோகங்களுடன் கூடி வரக்கூடிய அக்ஷய திருதியை நாளில், தவறாமல் தங்கம் வாங்குவது சிறப்பானது.

அப்படி தங்கம் வாங்க முடியாதவர்கள் எந்த பொருளை வாங்கினால் தங்கம் வாங்கிய பலன் கிடைக்கும்? அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அது மென்மேலும் பெருகி, நம்மிடம் சேரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இன்றளவிலும் இருக்கிறது. ஒரு சிறு குண்டுமணி தங்கத்தையாவது திருதியை நாளில் வாங்கி வைத்துவிட வேண்டும் என்பது தான் நம் எல்லோருடைய எண்ணமாக இருக்கும். ஆனால் இன்று இருக்கும் தங்கத்தின் விலை ஏற்றத்தில், எல்லோராலும் தங்கத்தை வாங்கி விட முடியுமா? என்றால் சற்று சிரமமான கேள்வி தான்.

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், தங்கத்தை வாங்குவது கஷ்டம் தான், அதற்கு பதிலாக தங்கத்திற்கு இணையான பலன்களை கொடுக்கக்கூடிய இந்த பொருளை வாங்கி வையுங்கள், நிச்சயம் தங்கம் உங்களிடமும் மகாலட்சுமி அருளோடு வந்து சேரும்.

அக்ஷய திருதியை நாளில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விடுங்கள். பின்னர் பூஜை அறையை சுத்தம் செய்து ஒரு மனையில் சிகப்பு அல்லது மஞ்சள் துணியை விரித்து அதில் மகாலட்சுமி, குபேரர், விநாயகர், மகாவிஷ்ணு, அன்னபூரணி ஆகியோரின் படங்கள் அல்லது சிலைகள் எது இருந்தாலும் அதனை பிரதிஷ்டை செய்யுங்கள்.

கங்கை தீர்த்தம் இருந்தால், அந்த தீர்த்தத்தை கொண்டு இந்த படங்களை அல்லது விக்கிரகங்களை சுத்தம் செய்து சந்தன, குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இல்லாதவர்கள் படங்களை சுத்தம் செய்ய பன்னீர் கலந்த தீர்த்தத்தை பயன்படுத்துங்கள். பின் மணம் மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

வெற்றிலை, பூ, பாக்கு, தேங்காய் போன்ற தாம்பூலத்தை ஒரு தட்டில் வைத்து, பச்சரிசி, தும்பை, தர்ப்பை ஆகியவற்றை படைத்து அக்ஷய திருதியை நாளில் தங்கம் பெருக தங்கத்தையும் சேர்த்து வைத்து, மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

இனிப்பு மற்றும் பழங்களை வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். கங்காஜலம் அல்லது துளசி தீர்த்தம் பூஜையில் இடம்பெற வேண்டும். ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தங்க நகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பூலத்தில் வையுங்கள். நெய் தீபம் ஏற்றி வைத்து குபேரர் சாலிசா, கனகதாரா ஸ்தோத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், கணேசன் சாலிசா போன்றவற்றை உச்சரித்து அல்லது ஒலிக்க விட்டு பூஜையை தீப, தூப, ஆரத்தி காண்பித்து நிறைவு செய்யுங்கள்.

திருதியை திதி ஆரம்பிக்கும் நேரம் ஏப்ரல் 29, 2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:31 மணிக்கு ஆகும். ஏப்ரல் 30, 2025 புதன்கிழமை பிற்பகல் 2:12 வரை திருதியை திதி நீடிக்கிறது. இதில் பூஜை செய்ய வேண்டிய நல்ல நேரம் ஏப்ரல் 30, 2025 புதன்கிழமை காலை 5.48 மணி முதல் பகல் 12:06 மணி வரை இருக்கிறது.

இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், மூன்று யோகங்களுடன் கூடிய அஷ்ட ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. தங்கம் வாங்க முடியாதவர்கள், தங்கத்திற்கு இணையாக குண்டு மஞ்சளை வாங்கி வைக்கலாம். நல்ல நேரத்தில் குண்டு மஞ்சளை கடையிலிருந்து பிரஷ்ஷாக வாங்கி, பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இந்த மஞ்சள் தங்கத்திற்கு இணையானது. பூஜை முடிந்த பின்னர் இந்த மஞ்சளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள், வீணாக்காதீர்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed