• Di.. Apr. 22nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புண்ணியம் சேர்க்கும் ஏகாதசி விரதம்

Apr. 22, 2025

செய்த பாவங்கள், கர்ம வினை நீங்கி, புண்ணியங்கள் பெருக, இறைவனை சரணாகதி அடைய, மகா விஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த நாள் ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசி விரதத்தை மாதத்தில் இரண்டு நாட்கள் கடைப்பிடிக்கின்றோம்.

சுக்லபட்ச வளர்பிறை ஏகாதசி மற்றும் கிருஷ்ணபட்ச தேய்பிறை ஏகாதசி ஆகிய இரண்டு நாட்களிலும் விரதம் இருந்து பெருமாளை எப்படி வழிபட பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும்? என்னும் விரத முறை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இப்பதிவில் அறிந்து கொள்ளப் போகிறோம்.

ஏகாதசி விரத நாளில் மூன்று வகையாக விரதங்களை மேற்கொள்ளலாம். துளி நீர் கூட அருந்தாமல் முழு உண்ணாவிரதம் இருந்து இறைவனை வழிபட வேண்டும்.

மற்றொன்று பழங்கள், பால், பழ ரசங்கள் போன்றவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது. மூன்றாவது சாமை, மோர், கஞ்சி போன்ற எளிய சாத்வீக உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது. இதில் உங்களால் எந்த வழிமுறையை பின்பற்றி விரதம் இருக்க முடியுமோ, அந்த வழிமுறையை நீங்கள் பின்பற்றி விரதம் இருக்கலாம், அது உங்கள் உடல்நிலையை பொறுத்தது.

ஏகாதசி அன்று காலையிலிருந்து, மறுநாள் துவாதசி காலை வரை விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதத்தால் முன்வினை பாவங்கள் நீங்கி, இறைவனின் திருவடிகளை சரணடைந்து, வாழ்வில் முன்னேற்றங்களை சந்திக்கலாம். மகாவிஷ்ணு படத்திற்கு அலங்காரம் செய்து, அவருக்கு கட்டாயமாக துளசி தீர்த்தம் வைக்க வேண்டும்.

அதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தையும், ஏலக்காய்களையும் பொடித்து சேருங்கள். இந்த புனித தீர்த்தம் இவ்விரதத்திற்கு ரொம்பவே முக்கியமானது. பின்னர் விஷ்ணுவிற்கு நைவேத்தியம் படைக்க சர்க்கரை பொங்கல், பானகம், நீர்மோர் ஆகியவற்றை வைக்கலாம்.

விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுவது, “ஓம் நமோ நாராயணாய” என்னும் சக்தி வாய்ந்த இந்த எட்டு எழுத்து மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது, விஷ்ணு காயத்ரி மந்திரம் சொல்லுவது போன்ற ஆன்மீக மந்திரங்கள் வீட்டில் ஒலிக்க செய்ய வேண்டும். மேலும் மகாவிஷ்ணுவிற்கு நெய் தீபம் ஏற்றுவது, அன்றைய நாளுடைய மிகச்சிறந்த வழிபாடு முறையாகும். –

நெய் தீபம் ஏற்றி வைத்து, மந்திரங்கள் உச்சரித்து, நைவேத்தியம் படைத்து, துளசி தீர்த்தம் வைத்து, மனதார இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அன்றைய நாள் விரதம் இருந்து, பக்தியுடன் மனதில் இறைவனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அசுப சொற்களை பயன்படுத்தக் கூடாது, கோபப்படக்கூடாது, சாந்தமுடனும், மனதை அமைதியுடனும் வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற வேலைகளை நீங்கள் வழக்கம் போல செய்யலாம். இரவில் கண் விழித்து பகவானை நினைத்து பஜனையில் ஈடுபடலாம்.

இதையும் படிக்கலாமே: குபேர அபிஷேக வழிபாடு ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும், மேலும் புத்திர பாக்கியம் உண்டாக்கும். குழந்தை இல்லாத தம்பதிகள் இருவருமாக சேர்ந்து இந்த விரதத்தை மாதம் இருமுறை கடைபிடிக்கலாம், நல்ல பலன் கிடைக்கும். துவாதசி அன்று காலையில் மகாவிஷ்ணுவை விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு, பின்னர் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். விரதத்தை முடிக்கும் பொழுது அன்னதானம் செய்யலாம். பசுவிற்கு தர்பை புல் தானம் செய்ய வேண்டும். மஞ்சள், துளசி, நீர்மோர் தானம் செய்யலாம்.

இவ்விரதம் மேற்கொள்வதன் மூலம் சரீரமும், ஆன்மாவும் சுத்தி ஆகிறது. மனதில் இருக்கும் தீய விஷயங்கள் அகன்று, உடலில் இருக்கும் கெட்ட கழிவுகள் நீங்கி பரிசுத்தமாகிறோம். உடலும், உள்ளமும் தூய்மை பெற்றால், வாழ்க்கையில் எல்லா நலன்களும் உண்டாகும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed