அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பல வருடங்களின் பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் (Gampaha) இன்று (22.04.2025) இடம்பெற்ற மக்கள் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர, “தேர்தல் காலத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம் என வாக்குறுதி வழங்கிணோம். இன்று அதனை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முதல் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது அது அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டை முன்னகர்த்தி செல்ல அரச ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். தற்போது 30 ஆயிரம் புதிய அரச ஊழியர்களின் அரச துறைக்குள் உள்ளெடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
விண்ணப்பங்கள் கோரப்படும் போது, அதற்கு விண்ணப்பித்து, பரீட்சை எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெற்று அரச சேவைக்குள் உள்நுழைய முடியும்.
சிறந்த ஆளுமையுள்ள அரச ஊழியர்களை அரச துறைக்குள் உள்வாங்க நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம்.”என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.