அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பால் பல பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் அலைமோதி வருகின்றனர்.
அமெரிக்க அதிபரான ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் வரும் பிறநாட்டுப் பொருட்களுக்கான வரிகளை அதிகரித்து பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார். இதில் சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாட்டுப் பொருட்களுக்கு வரிகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஆடைகள், காலணிகள், மின்னணு சாதனங்கள் என பல பொருட்கள் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை என்பதால் அவற்றின் விலை வரும் காலங்களில் கிடுகிடுவென உயரும் அபாயம் எழுந்துள்ளது.
இதனால் சூப்பர் மார்க்கெட், ஆடையகங்கள் என படையெடுத்துள்ள மக்கள் விலை ஏறும் முன்னரே கண்ணில் பட்டவற்றையெல்லாம் வாங்கி குவித்து வருகின்றனர். ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால் உலகளாவிய பங்குசந்தை பெரும் சரிவை சந்தித்துள்ளதுடன், உலக பணக்காரர்கள் பில்லியன் கணக்கான அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். உலக அளவில் இந்த பரஸ்பர வரி விதிப்பு பாதிப்புகளை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.