• Sa.. Apr. 5th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடக்கில் 16,000 வேலைவாய்ப்புக்கள் : வெளியான தகவல்

Apr. 5, 2025

அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் (Arjuna Herath) தெரிவித்தார்.

அத்துடன் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில்வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் எவ்வளவு விரைவாக வடக்கின் மூன்று முதலீட்டு வலயங்களுக்குமான பணிகளை ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதனைச் செய்வதற்கே விரும்புகின்றோம் என குறிப்பிட்டார்.

வடக்கில் 16,000 வேலைவாய்ப்புக்கள் : வெளியான மகிழ்ச்சித் தகவல் | Investment Zones Launched In North 16000 Vacancies

காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய முதலீட்டு வலயத்துக்கான போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் தொடர்பாக தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன. இதனை முன்னெடுப்பதிலுள்ள உடனடிச் சவால்கள் இனங்காணப்பட்டு அவற்றுக்கு தீர்வுகளும் கண்டறியப்பட்டன.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய காலத்தில் அதற்கான தொடருந்துப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை புனரமைத்து மீளமைப்பதுடன் அதனை காங்கேசன்துறை துறைமுகம் வரையில் விரிவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

பரந்தனுக்கு அண்மையாக தொடருந்து நிலையம், ஏ – 9 பிரதான வீதி உள்ளமை சாதகமான அம்சம். அத்துடன் சில இடங்களில் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டது.

வடக்கில் 16,000 வேலைவாய்ப்புக்கள் : வெளியான மகிழ்ச்சித் தகவல் | Investment Zones Launched In North 16000 Vacancies

மாங்குளத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணி வனவளத் திணைக்களத்துக்குரியது என்பதால் அதனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் மூன்று முதலீட்டு வலயங்களைச் சுற்றியும் வேலிகளை அமைத்து அதனை அடையாளப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed