அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆரம்பித்து வைத்த வர்த்தக போர் உலக பொருளாதாரத்தை மந்த நிலைக்கு தள்ளியுள்ளதாக முதலீட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த இரண்டாம் திகதியன்று டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளின் பொருட்கள் மீது குறைந்தபட்சம் பத்து சதவீதம் இறக்குமதி வரி விதித்தார்.
அத்தோடு, அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சுமார் 60 நாடுகள் மீது கூடுதல் வரிகளை ட்ரம்ப் விதித்தார்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் வர்த்தக போருக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதனை உறுதி செய்வது போல் ட்ரம்ப் வரி விதித்த அடுத்த 48 மணி நேரத்துக்குள் சீனா பதிலடி கொடுத்தது.
இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு சீனா 34 சதவீதம் வரி விதித்த நிலையில் சர்வதேச வர்த்தக போர் வெடிக்கும் என்ற அஞ்சம் அதிகரித்தது.
இதன் விளைவாக தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று (04) பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் S&P 500 இன்டெக்ஸ் சுமார் ஆறு சதவீதம் சரிவடைந்ததுள்ளதாகவும் இதே காலத்தில் அமெரிக்க முதலீட்டாளர்கள் ஐந்து லட்சம் கோடி டொலரை பங்குச் சந்தையில் இழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.