வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. சில வேளைகளில் இதற்கு பின்னரும் மழை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையின்படி இந்த காற்று சுழற்சி தாழமுக்கமாக மாற்றம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஊடாக இலங்கையின் நிலப்பகுதிக்குள் நுழைந்து நாட்டின் நடுப்பகுதியினூடாக அரபிக் கடலை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 18ம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பரவலாக அவ்வப்போது மழை கிடைக்கும் வாய்ப்பிருந்தாலும் இன்று முதல் (11.03.2025) அடுத்த மூன்று நாட்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பெரிய மற்றும் நடுத்தர குளங்கள் வான் பாய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ் நிலப்பகுதிகளில் எதிர்வரும் 12.03.2025 இற்கு பின்னர் மிதமான வெள்ள அனர்த்தத்துக்கு வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள்நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. என்ற அளவில் காணப்படுகிறது.
கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசுகின்றது. இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும். குறிப்பாக மழை பொழியும் போதும் அதற்கு பின்னரும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.
இன்று மாலை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் 21ம் திகதி குறிப்பிட்டது போல் இந்த மார்ச் மாதத்தின் கணிசமான நாட்கள் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என்பது மீளவும் குறிப்பிடத்தக்கது. என அவர் அறிவித்துள்ளார்.