யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு , சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில், தனது குடும்ப வறுமை காரணமாக பழ வியாபாரத்தில் சிறுவன் ஒருவன் ஈடுபட்டு , வருமானத்தை ஈட்டி தனது குடும்பத்தினை பார்த்து வருகின்றான்.
அச்சிறுவனிடம் யாழ் . மாநகர சபையின் வரி அறவீட்டு உத்தியோகஸ்தர் ஒருவர் வரி அறவீடு செய்யாது , சிறுவனை மிரட்டி பழங்களை லஞ்சமாக பெற்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுவன் பழங்களை கொடுக்க மறுத்துள்ளான்.
அந்நிலையில் சிறுவன் சட்டவிரோதமான முறையில் பழ வியாபாரம் செய்வதாக கூறி சக உத்தியோகஸ்தர்களுடன் சென்று , சிறுவனின் பழங்களை பறிமுதல் செய்துள்ளார். அதன் போது சிறுவனையும் தாக்கியுள்ளனர்.
சிறுவனின் பழங்களை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றும் போது பழங்கள் பழுதடைந்து விடும் , அவற்றை ஒழுங்கான முறையில் அடுக்க வேண்டும் என சிறுவன் கூறிய போதிலும் ,அதனை பொறுப்படுத்தாது , சிறுவனின் பழங்களை அடாத்தாக பறித்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
வீதியோரமாக பழ வியாபாரத்தில் இது வரை காலமும் சிறுவன் ஈடுபட்டிருந்த போது பழங்களை லஞ்சமாக பெற்று வந்தவர் , சிறுவன் இலஞ்சம் கொடுக்க மறுத்த போது , தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து பழங்களை பறித்து சென்ற சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.