யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஓமந்தை பகுதியில் புரண்டுள்ளதாக தெடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்து சம்பவம் ஓமந்தை பகுதியில் இன்று மாலை சுமார் 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதி தொடருந்து ஓமந்தை பகுதியில் சென்றுகொண்டிருக்கையில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற தொடருந்து வருகை தந்து கொண்டு இருந்ததன் காரணமாக அடுத்த தடத்துக்கு மாற்றியபோதே விபத்து ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இரண்டு தொடருந்து பெட்டிகள் வழித்தடத்திலிருந்து கீழ இறங்கியுள்ளதுடன் தண்டவாளத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு நோக்கி செல்ல இருந்த பயணிகளை கொழும்பிலிருந்து யாழ். நோக்கி வந்த தொடருந்தில் ஏற்றி மீண்டும் அவர்களை கொழும்பு நோக்கி கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளை தொடருந்து திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து யாழ். நோக்கி வந்த பயணிகளை பேருந்துகளில் செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது தொடருந்து பாதையை சரிசெய்யும் பணியில் தொடருந்து திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.