செவ்வாய் கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகு கால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம் ராகு காலம். ராகு தோஷம் நீங்க இந்த ஆராதனை நடைபெறுவதால், ராகுவின் அதி தேவதையான துர்க்கையை ராகு காலத்திலேயே விளக்கேற்றித் துதிக்க வேண்டும்.
அப்படி ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால், அந்த பூஜை மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையைவிட பலன் மிகுந்ததாக கருதப்படுகிறது. அதற்கு ஒரு காரணம் செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன் துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு முழுபலனையும் அடைந்தவன்.
அதனால் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து செய்யும் ராகுகால துர்கா பூஜைக்கு பலன்கள் அதிகம். அதனால் திருமணத்தடை நீங்குதல், செவ்வாய் தோஷம் அகலுதல், பீடைகள் விலகுதல், காரிய சித்தி, பகை விலகுதல் போன்ற நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.
செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் நிறப் பூக்களான தங்க அரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகிய மலர்களை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிற வாழைப் பழம், பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண் பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்திற்கும் பயன்படுத்தி ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியைப் பூஜிக்க வேண்டும்.
எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை இந்த அம்மனுக்கு விசேஷம். செவ்வாய்க்கிழமையன்று 5 எலுமிச்சம் பழங்களை எடுத்து இரண்டாக வெட்டி கிண்ணம் போல் அமைத்து, அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும்.