திபெத்தை உலுக்கியுள்ள பூகம்பத்தினால் 126 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 450 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம் மீட்பு பணிக்காக 15000 மீட்பு பணியாளர்களை சீனா திபெத்திற்கு அனுப்பியுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள பகுதியை தாக்கிய பூகம்பம் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடும் குளிர் நிலவுகின்றது இதனால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள சீனஊடகங்கள் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கான சீனாவின் துணை பிரதமர் திபெத் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளன.
இந்த பகுதி ஒரு பெரிய பிழைக்கோட்டில் அமைந்துள்ளதால் இங்கு பூகம்பங்கள் என்பது பரவலான விடயமாக இருப்பினும் செவ்வாய்கிழமை பூகம்பம் சமீபத்தைய சீன வரலாற்றில் மிக மோசமான ஒன்று. ரிச்டர் அளவையில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் நேபாளம் இந்தியாவிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திபெத்தினை சீனா கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதனால் அங்கு இணையசேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, அரசாங்கத்தின் அனுமதியின்றி செய்தியாளர்கள் செயற்பட முடியாது. இதன் காரணமாக பூகம்பம் குறித்து சீன ஊடகங்களின் மூலமே அறிந்து கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் பகுதிகளில் மீள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சீன ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மீட்பு பணியாளர்களிற்கு உதவுவதற்காக சீன விமானப்படையின் விமானங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன, ஆளில்லா விமானங்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
30,000 மக்கள் அந்த பகுதியில் இடம்பெயர்ந்துள்ளதுடன் 35000 கட்டிடங்கள் தரைமட்டமாகியிருக்கலாம் என சீன அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பூகம்பம் மையம் கொண்டிருந்த டிங்கிரி கன்ரியில் தொலைபேசி இணையசேவைகளை சரி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.