நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு (Batticaloa) – போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில் நேற்றுக் காலை (4.12.2024) நீரோடையில் வீழ்ந்து குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.
முருகேசு விகான் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த நீர்நிலைக்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து குழந்தை தத்தி நடந்துவந்து நீரோடைக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது நீருக்குள் வீழ்ந்துள்ளது.
குழந்தை மீட்கப்பட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் இடைவழியில் உயிரிழந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காகக் குழந்தையின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.